அயன் சூர்யாவே வைர கடத்தலில் தோற்றுவிடுவார் போலேயே... சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பலே ஆசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அயன் படத்தில் வரும் வைரம் கடத்தல் காட்சிகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவுக்கு ஆசாமி ஒருவர் துபாய்க்கு வைரங்களை கடத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், சென்னை விமான நிலையத்தின் பலமான சோதனையில் சுமார் 5.76 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் அந்த ஆசாமியிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் தங்கம், வைரம் முதல் பல அரிய பொருட்கள் வரை கடத்த முற்பட்டு சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. சென்னையில் இருந்து துபாய் செல்ல எமிரேட்ஸ் விமான நிறுவனம் மூலம் பயணிக்க இருந்த ஆசாமி ஒருவரை விமான நிலைய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.
அவரது சூட்கேஸில் பொருட்கள் எல்லாம் ஒரு திணுசாக மறைத்து வைக்கப்பட்டது போல் அடுக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விமான நிலையை அதிகாரிகள் முழுவதுமாக சோதனை செய்துள்ளனர். உயர் ரக டெலஸ்கோப்புகள் 4 அந்த பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. மறைத்து வைக்க முயற்சித்த காரணத்தாலேயே அதை தீவிர சோதனை செய்துள்ளனர்.
டெல்ஸ்கோப்பின் கைபிடி பகுதியைக் கழட்டி பார்த்த போது சின்ன சின்ன ப்ளாஸ்டிக் பைகள் இருந்துள்ளன. இதுபோல் அனைத்து டெலஸ்கோப்புகளிலும் இருந்துள்ளன. அனைத்து ப்ளாஸ்டிக் பைகளுக்குள்ளும் பட்டைத்தீட்டப்பட்ட வைரக் கற்கள் இருந்துள்ளன். இவை அனைத்தையும் அந்த ஆசாமி துபாய்க்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
சுமார் 5.76 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது. வைரக் கற்கள் அதிகம் கிடைக்கும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத் தீட்டப்படாத வைரக் கற்களை எடுத்து வந்து அவற்றை தீட்டி விலை மதிப்பை அதிகரித்து துபாய் போன்ற பணக்கார நாடுகளுக்கு கடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்