20 வருஷம் ஆச்சு.. இனிமே நம்மள யாரு தேடப்போறான்னு நெனச்சு வெளிநாட்டுல இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நபர்.. ஏர்போர்ட்லேயே போலீஸ் செஞ்ச சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நபர் 20 வருடங்கள் கழித்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்குகள்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். தற்போது இவருக்கு 43 வயதாகிறது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்குகளில் ரவிக்குமாருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இவரை தஞ்சை மற்றும் புதுகை மாவட்ட காவல்துறையினர் வலைவீசி தேடிவந்தனர். ஆனாலும், காவல்துறையிடம் சிக்காமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார் ரவிக்குமார்.
இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட காவல்துறையினர் ரவிக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். மேலும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் LOC எனப்படும் லுக்அவுட் சர்குலர் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அவர் சர்வதேச விமான நிலையங்கள் வழியாக பயணம் செய்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற ரவிக்குமார் அதன்பிறகு இந்தியா வரவேயில்லை.
பயணம்
அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் டிரைவராக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 20 வருடங்களாக தலைமறைவாக இருந்த ரவிக்குமார் இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டதால் தன்னை யாரும் தேட மாட்டார்கள் என நினைத்து சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்திருக்கிறார். இதன்படி ஏர் இந்தியா விமானம் மூலமாக நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார் ரவிக்குமார்.
அப்போது, அவரது பயண ஆவணங்களை விமான நிலையத்தில் இருந்த குடியேற்ற துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது 20 வருடங்களுக்காக காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி அவர் என்பதை அறிந்த அதிகாரிகள் அவரை தனியறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சிறப்புப்படை போலீசார் சென்னை விமானநிலையத்திற்கு விரைந்து சென்று ரவிக்குமாரை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.
20 ஆண்டுகளாக பல்வேறு திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்த நபர் சொந்த ஊர் திரும்பும்போது கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்