'மாரத்தான் ஓட்டத்தை கண்காணிக்க சென்றுவிட்டு’... ‘வீடு திரும்பியபோது’... 'மாணவ நண்பர்களுக்கு'... 'சாலையோரத்தில் நிகழ்ந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே மாரத்தான் போட்டியை கண்காணிக்க இருசக்கரவாகனத்தில் சென்ற 12-ம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருகண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (17). இவர் செங்குன்றம் எம்.ஏ. நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை இவர் படித்து வந்த பள்ளி சார்பில் ‘விட்டமின் சி’ குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் செங்குன்றம் அம்பேத்கர் நகரில் இருந்து அலமாதி வரை நடந்தது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டத்தை கண்காணிக்க சுரேந்தர் மற்றும் அவருடன் படிக்கும் நண்பரான சோத்து பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் பாலாஜி (17) ஆகியோர் சென்றனர்.
பின்னர் சுரேந்தரும், தனுஷ் பாலாஜியும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். எடப்பாளையம் அருகே செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் வந்து கொண்டு இருந்தபோது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேந்தர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தனுஷ் பாலாஜி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தனுஷ் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த சுரேந்தரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிவேகம் மற்றும் தலைக் கவசம் அணியாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில், விபத்து நடந்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.