'பெட்டிக்கடையில் ஓசி சிகரெட் கேட்ட வாலிபர்'... 'இரவோடு இரவாக நடந்த சம்பவம்'... கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிகரெட் கடன் கேட்டுக் கொடுக்காத ஆத்திரத்தில் இரவோடு இரவாக இளைஞர் ஒருவர் கடையைக் கொளுத்தி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பெட்டிக்கடையில் ஓசி சிகரெட் கேட்ட வாலிபர்'... 'இரவோடு இரவாக நடந்த சம்பவம்'... கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். பெட்டிக் கடை நடத்தி வரும் இவர், ஊரடங்கு காரணமாகக் கடையைத் திறக்காமல் இருந்தார். தற்போது அந்த பகுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், தனது கடையைத் திறந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்ததால் மிகுந்த பண நெருக்கடியில் இருந்துள்ளார்.

இதனால் வியாபாரத்தை மிகவும் சிக்கனமாக நடத்த முடிவு செய்த அவர், ஊரடங்கிற்கு முன்பு கடையில் கொடுக்கப்பட்ட கடனைகளை வசூலிக்கவும், புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்க்கவும் முடிவு செய்திருந்தார். இந்நிலையில்  அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் சம்பவத்தன்று இரவு 7 மணிக்குப் பூமிநாதனிடம் ஒரு சிகரெட் கடன் கேட்டுள்ளார்.

சரி ஒரு சிகரெட் தானே என அவரும் அதைக் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த பொருட்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்த பூமிநாதனிடம் மீண்டும் வந்த, குணசேகரன் மீண்டும் ஒரு சிகரெட் கடன் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், தம்பி வியாபாரமே ஆகவில்லை. முதலில் ஒரு சிகரெட் தானே எனக் கொடுத்தேன். மீண்டும் மீண்டும் வந்து கேட்டால் என்ன நியாயம் எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து பூமிநாதனிடம் தகராறு செய்த குணசேகரன், எனக்கு  சிகரெட் தராமல் எப்படிக் கடை நடத்துவாய் எனப் பார்க்கிறேன் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின்பு இரவு வெகுநேரம் கழித்து அந்த பகுதிக்கு வந்த குணசேகரன், தனக்கு சிகரெட் வழங்காத பூமிநாதனின் கடையைத் தீப்பெட்டியால் தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். கூரையால் ஆன கடை என்பதால் அடுத்த சில நிமிடங்களில் கடை மளமளவென எரிந்து நாசமானது. உள்ளே இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.

இதற்கிடையே காலையில் கடையைத் திறக்கலாம் என வந்த பூமிநாதனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவு பூட்டிவிட்டுச் சென்ற கடை, காலையில் வந்து பார்த்தபோது, கடை இல்லாமல் வெறும் சாம்பல் மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போய், நாகமலைப் புதுக்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து குணசேகரனைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்