'கவுன்சிலர் ஆன என்ஜினீயரிங் பட்டதாரி'... 'திடீரென சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்'... பரபரப்பு காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலர் ஆன பொறியியல் பட்டதாரி வாலிபர், பதவியேற்றதும் சுவர் ஏறி குதித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, சுயேச்சையாக போட்டியிட்ட அரவிந்த் என்ற வாலிபர், 1300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். பொறியியல் பட்டதாரியான இவர் தாய், தந்தையை இழந்த நிலையில், தனது பாட்டியின் உதவியுடன் பொறியியல் படித்து, பின்பு வழக்கறிஞர் பட்டமும் பெற்றார்.
இதனிடையே இந்த நிலையில், வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுவரும் நிலையில், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது 8-வது வார்டு உறுப்பினராக அரவிந்த்தும் பதவியேற்று கொண்டார். இந்த சூழ்நிலையில் பதவியேற்ற சில நிமிடங்களில் யாரும் எதிர்பாராத நிலையில், சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே பல ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடங்களை கைப்பற்ற சுயேட்சைகளின் ஆதரவை பெற திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முயற்சி செய்து வரும் நிலையில் அந்த காரணத்திற்காக அரவிந்த் ஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே செல்லம்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகள் இருக்கும் நிலையில், 9 வார்டில் அதிமுகவும், 6 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் சுயேட்சையான அரவிந்தும் வெற்றி பெற்றனர்.ஒன்றிய தலைவர் மற்றும் சுயேட்சை தலைவர் ஆகிய பதவிகள் அதிமுக வசமே செல்ல இருக்கும் நிலையில், சுயேட்சையின் ஆதரவு எந்த வகையிலும் இரு கட்சிக்கும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.