இந்த App-அ install பண்ணும் ‘பெண்களுக்கு’ 10% தள்ளுபடி.. ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவலன் செயலியை பதிவிறக்கம் பெண்களுக்கு 10% தள்ளுபடி என மதுரையில் உள்ள ஒரு ஹோட்டல் நிர்வாகம் அறிவித்து அசத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தமிழக காவல்துறை ‘காவலன்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை பெண்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனியாக பயணிக்கும் அனைத்து பெண்களும் கட்டாயம் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் என காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது.
ஆபத்தான நேரங்களில் இந்த செயலியின் மூலம் தகவல் கொடுத்தால் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் நீங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து பாதுகாப்பார்கள். மேலும் செல்போனில் இணைய வசதி இல்லையென்றாலும் இந்த செயலில் 'SOS' என்ற ஆப்ஷனை அழுத்துவதன்மூலம் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பட்டுவிடும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனால் இந்த செயலியை பெண்கள், முதியவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அந்தவகையில் மதுரையில் உள்ள பொன்மேனி பகுதியை சேர்ந்த ராஜபிரபு என்ற இளைஞர் தனது ஹோட்டலில் ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளார். அதில், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்களுக்கு 10% தள்ளுபடி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவரது ஹோட்டலுக்கு வரும் பெண்களிடம் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறார். இவரது முயற்சிக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.