'அப்பா...! பல்ல விழுங்கிட்டேன்...' 'வயித்துல போயிருக்கும் என அசால்ட்டா இருந்த பெற்றோர்...' - ஸ்கேன் எடுத்து பார்த்து அதிர்ச்சியான டாக்டர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

7 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கியிருந்த பல்லை வெற்றிகரமாக நீக்கிய மதுரை மருத்துவர்கள்  பாராட்டை பெற்று வருகின்றனர்.

'அப்பா...! பல்ல விழுங்கிட்டேன்...' 'வயித்துல போயிருக்கும் என அசால்ட்டா இருந்த பெற்றோர்...' - ஸ்கேன் எடுத்து பார்த்து அதிர்ச்சியான டாக்டர்கள்...!

சிவகங்கை மாவட்டம் இளையங்குடி, அரியாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கு பாலராகவன் என்ற 7 வயது மகன் உள்ளார். பாலராகவன் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தனக்கு ஆடிக்கொண்டிருக்கும் பல் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் அன்றைய தினமே சிறுவனின் பல் உடைந்து உடலுக்குள் சென்றுள்ளது.

சிறுவன் பாலராகவன் இதுகுறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்த போது, உணவுக்குழாய் வழியே வயிற்றுக்குள் சென்றிருக்கும், அதெல்லாம் சரி ஆகிவிடும் என சொல்லிவிட்டனர்.

இந்நிலையில் அன்றிலிருந்து 10 நாட்களாக சிறுவனுக்கு தொடர் காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. மேலும் மருந்துகள் பல எடுத்தும் சிறுவனுக்கு சரி ஆகவில்லை. இதனால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்ட சிறுவன் பலராகவனுக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் குழந்தை விழுங்கிய அந்த பல் வலது நுரையீரலின் மூச்சுக் குழாயை அடைந்து கொண்டிருப்பது தெரியவந்தது.

அதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுவனுக்கு கடந்த 29-ம் தேதி காது மூக்கு தொண்டை துறை தலைவர் தினகரன், குழந்தைகள் நலத்துறை தலைவர் பாலசங்கர் மற்றும் மயக்க மருத்துவர்கள் உதவியுடன் பிராங்கோஸ்கோப்பி மூலம் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த பல் வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர்.

மேலும் சிறுவனுக்கு 5 நாட்கள் நுரையீரல் கிருமி தொற்றுக்கான சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் பாலராகவன் முழுமையாக குணமடைந்துள்ளதால் பெற்றோருடன் சிவகங்கைக்கு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களிலும், செய்திகளிலும் பரவி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்