‘ஆன்லைனில்’ மதுபானம் விற்க கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடியுடன் நடந்த வீடியோ கான்ஃபிரன்ஸ் கூட்டத்தில் பல மாநில முதலமைச்சர்கள் அரசு ஊழியர்கள் ஊதியம் கொடுக்க கூட நிதியில்லாமல் இருப்பதாகவும், அதனால் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது குடிமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும், இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த நிலையில் ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில், ஆன்லைனில் மதுவிற்பனைக்கு கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.