அப்பாவையே அசர வைத்த லிடியன் நாதஸ்வரம்.. அதுவும் இசைஞானி பாட்டுக்கு.. செம வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இசைக் கலைஞரான லிடியன் நாதஸ்வரம் தனது தந்தையுடன் பியானோ வாசிக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையை சேர்ந்தவர் லிடியன் நாதஸ்வரம். சிறு வயது முதலே இசை மீது மிகுந்த ஆர்வமும் காதலும் கொண்டிருந்த லிடியனை அதே துறையில் பயணிக்க அவரது தந்தை வர்சா சதீஷ் அனுமதித்திருக்கிறார். பியானோவில் தனக்கு உள்ள திறமையை மென்மேலும் வளர்த்த லிடியன் அதனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் வெளிப்படுத்தினார். ஒரே நேரத்தில் இரு பியானோக்களில் இருவேறு ராகத்தை வாசித்து அங்கு வந்திருந்த அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.
அந்த மேடையில் அவருக்கு World’s Best என்ற விருதும் 7 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் கிடைத்தது. பல நாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் இந்தியா சார்பாக கலந்துகொண்டது லிடியன் மட்டுமே. இவருடைய திறமையை கண்டு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இவரை,"இந்தியாவின் இசைத் தூதுவன்" என அழைத்தார். இது அப்போது பெரும் வைரலாகியது.
தொடர்ந்து, பல மேடைகளில் லிடியன் தனது இசைத்திறமையை வெளிப்படுத்தியும் வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2022-ல் இவருடைய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றிருந்தது. அதேபோல, சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவிலும் பியானோ வாசித்து மக்களை திகைக்க வைத்தார் லிடியன்.
இந்நிலையில், லிடியன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், தனது தந்தைக்கு பின்புறம் நின்றபடி பியானோ வாசிக்கிறார் லிடியன். 'மூடுபனி' திரைப்படத்தில் வரும் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை அவரது தந்தை ஹம்மிங் செய்ய, லிடியன் பட்டையை கிளப்புகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு இசைஞானி இளையராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தன்னுடைய ஆசிரியர் மேஸ்ட்ரோ இளையராஜா என்றும் தான் அவரது முதல் மாணவன் எனவும் லிடியன் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்