PS1: அமரர் கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை..! நெகிழ்ச்சியில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.

PS1: அமரர் கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை..! நெகிழ்ச்சியில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு..

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது.

திரையரங்கில் வெளியான் இப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் நவ.4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்தனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்தனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்தனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்தனர்.

இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தனர். மேலும் அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு வருகை தந்தனர். அங்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் திருமதி சீதா ரவியிடம் 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர்.

இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 'பொன்னியின் செல்வன்' நாவலை எழுதிய அமரர் கல்கிக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் 1 கோடி ரூபாயை மூலதன நிதி உதவியாக வழங்கி இருக்கிறார்கள். லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இந்த செயலுக்கு, திரை உலகினர் மட்டுமல்லாமல், அவரின் வாசகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

PONNIYIN SELVAN, PS1, KALKI KRISHNAMURTHI, MANIRATNAM, LYCA, VIKRAM, KARTHI, JAYAM RAVI

மற்ற செய்திகள்