'ஈழ' இறுதிப் போரின்போது 'புலிகளின் தலைமை' சொன்னதற்காகவே 'இதைச் செய்தேன்'.. திருமா அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே, தான் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்பேட்டியில் திருமாவளவன் பேசியவை:
2006லிருந்தே திமுகவுடன் கூட்டணியில் இருந்த நான், 2009ல் திடீரென ஒருமுறை உண்ணாவிரதம் இருந்தேன். அதற்கு நெடுமாறன், நடராஜன், டாக்டர் ராமதாஸ் இன்னும் அதிமுக கூட்டணியில் இருந்த சிலரும் ஆதரவளித்தனர். இதனையடுத்து திமுகவின் ஆட்சியை கவிழ்க்கவே அதிமுகவைச் சேர்ந்தவர்களுடன் உண்ணாவிரதப் போராட்டம் நிகழ்த்துவதாக கருத்து பரப்பப் பட்டது. எனினும் ஆற்காடு வீராசாமி, கி.வீரமணி உள்ளிட்டோர், ‘தலைவர் கலைஞர் சங்கடப்படுகிறார், போராட்டத்தை கைவிடுங்கள்’ என கூறியும் நிறுத்தாத நான், ராமதாஸ் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பிறகே போராட்டத்தை கைவிட்டேன்.
அதன் பிறகு திமுக-காங்கிரஸ் கூட்டணியில், மக்களவைத் தேர்தலில் நான் இரு தொகுதிகளில் போட்டியிட தயாரானேன். அதன் பின் ஈழத்தில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது. புதுக்குடியிருப்பைச் சுற்றி சிங்கள ராணுவம் சூழ்ந்தது. பிரபாகரன் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற தகவல் வந்தது. அப்போது தூக்கமில்லாமல், சாப்பாடு இல்லாமல், பிரச்சாரத்துக்கு செல்ல மனமில்லாமல், தவித்த நான், தலைவர் கலைஞரிடம் சென்று, நான் அந்த 2 தொகுதிகளையும் அவரிடமே ஒப்படைத்தேன். அப்போது, ‘வென்றாலும் தோற்றாலும் புலிகள்தான் மாவீரர்கள், பிரபகாரனை ராஜீவ் காந்தி வியந்து பாராட்டியுள்ளார். இந்த அழிவுகளை எதிர்கொள்ளும் துணிச்சலுடன்தான் பிரபாகரன் நிற்கிறார்’ என்று கூறிய கலைஞர், ‘தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாராளுமன்றத்தில் நின்று ஈழத்துக்காக பேசுங்கள்’ என்று அறிவுறுத்தினார்.
இதனிடையே சேரலாதன் (விடுதலைப் புலிகள்) என்னை தொடர்புகொண்டு ஆவேசமாக பேசினார். ‘தமிழ்நாட்டு தலைவர்களின் சுயநலத்துக்காக நீங்கள் பேச பேச எங்க மேல 10 குண்டு அதிகமாக போடுகிறார்கள். காங்கிரஸை, சோனியா காந்தியை, மத்திய் அரசை விமர்சிப்பது உங்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம், எங்களுக்கு பயன்படாது’ என்று அவர் கூறினார்.
அதன் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நடேசன் அண்ணனிடம் பேசுங்கள் என்று சேரலாதன் நடேசனிடம் போனை கொடுத்தார். அப்போது பொறுமையுடன் பேசிய நடேசன், ‘நான் தலைவரின் (பிரபாகரன்) ஒப்புதலுடன் பேசுகிறேன். நீங்கள் இந்த முடிவை எடுத்ததற்காக எந்த தயக்கமும் வேண்டாம். நீங்கள் 2 தொகுதிகளிலும் நிக்கணும், ஜெயிக்கணும். மறுபடியும் காங்கிரஸின் ஆட்சி வருவதற்கான வாய்ப்புள்ளதால், நீங்களும் வன்னியரசு போன்ற ஈழ உணர்வுள்ள 2 பேர் பாராளுமன்றத்திற்கு சென்றால்தான் எங்களுக்காக வலுவாக பேச முடியும். நாங்கள் ஆபத்தான சூழலில் இருக்கிறோம். எந்த நேரத்திலும் நாங்கள் கொல்லப்படலாம். அண்ணன், தலைவர்தான் இதைச் சொல்லச் சொன்னார்’ என்று கூறினார்.
புலிகளுடன் எனக்கு நட்பு இருந்தது காங்கிரசின் மேலிடத்துக்கும் தெரியும். ஆனால் எனக்கும் காங்கிரசுக்கும் பாஜக, மதவாத, சனாதான கொள்கைகள் மீதான எதிர் நிலைப்பாடு இருந்தது. ஆனால் முழுக்க முழுக்க பிரபாகரன் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தார் என்றும் பாஜகவை எதிர்த்தார் என்றும் நான் கூறவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து குற்றவுணர்வு காரணமாக வெளியேறவிருந்த நான் என் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். நான் காங்கிரஸிலும், வைகோ பாஜகவிலும் இருக்க வேண்டும் என்பது போன்றதொரு தந்திர உத்தி புலிகளுக்கு தேவைப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு திருமாவளவன் அப்பேட்டியில் கூறியிருந்தார்.