'இரு லாரிகளுக்கிடையே சிக்கிய மினி லாரி' ... 'அடுத்தடுத்து லாரிகள் மோதி நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் அருகே டாடா ஏஸ் என்ற மினி சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'இரு லாரிகளுக்கிடையே சிக்கிய மினி லாரி' ... 'அடுத்தடுத்து லாரிகள் மோதி நேர்ந்த சோகம்'!

ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து மாடு ஏற்றிக்கொண்டு, மினி லாரியான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி மேம்பாலத்தில் நள்ளிரவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மேம்பாலத்தின் மீது முன்னே சென்ற லாரி, வேகத்தை சட்டென்று குறைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய டாடா ஏஸ் வாகனம், லாரியின் பின்புறமாக மோதியது.

அதே நேரத்தில் டாடா ஏஸ் வாகனத்தின்மீது பின்னால் வந்த மற்றொரு லாரியும் அதிவேகத்தில் மோதியது. இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட டாடா ஏஸ் வாகனம் முற்றிலும் சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த ரமேஷ், பாலு மற்றும் ஷாருக்கான் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஓட்டுநர் சாதிக் பாட்ஷா சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிருக்கு போராடிய நிலையில் மாடு மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விபத்தில் பலியானோர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, SALEM, LORRY, TATAACE