நல்ல 'வெடக்கோழியா' பாத்து புடி... கரூரை அதிரவைத்த 'மர்ம' நபர்கள்... கடைசில இப்டி பண்ணிட்டாங்களே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கினால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சமீபத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருடன் ஒருவன் வீட்டில் ஆக்கி வைத்திருந்த மீன் குழம்பை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியில் பொதுமக்களே அவனை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த வகையில் தற்போது கரூரில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டம் புலியூரை ஒட்டியிருக்கும் ஊர் பி. வெள்ளாளப்பட்டி. இந்த ஊரை சேர்ந்த விவசாயி சுப்புராயன் தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். ஊரடங்கால் இரவில் தோட்டத்தில் படுப்பது அவரின் வழக்கம். அதேபோல சம்பவ தினத்தன்று தன்னுடைய தோட்டத்தில் உள்ள கொட்டகையில் சுப்புராயன் படுத்திருந்து உள்ளார். இரவு 11 மணியளவில் திடீரென ஏதோ சத்தம் கேட்டுள்ளது.
அப்போது ஒருவர், 'சுப்புராயன் தோட்டத்துக் கோழிகள் நல்லா இருக்கும்னாங்க. நல்ல வெடக்கோழியா பார்த்து பிடி' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறார். இதையடுத்து சத்தம் வந்த திசையை நோக்கி சுப்புராயன் செல்ல இவரைக்கண்ட மர்ம நபர்கள் இரண்டு பேர் வேலியைத் தாண்டி குதித்து ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க முடியாமல் திரும்பி வந்த சுப்புராயன் வேலி மறைவில் ஹீரோ ஹோண்டா டியூ வண்டி ஒன்று நிற்பதை பார்த்தார்.
கோழியை திருடிய திருடர்கள் பதட்டத்தில் தாங்கள் வந்த பைக்கை விட்டு சென்று விட்டனர். உள்ளே சென்று கோழிகளை எண்ணி பார்த்தபோது கோழிகளில் நான்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மர்ம நபர்களின் வண்டியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சுப்புராயன் தன்னுடைய 2000 ரூபாய் மதிப்புள்ள கோழிகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்