‘கொரோனா பரவல் இன்னும் முழுசா குறையல’.. அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.. ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், படிப்படியாக நோய் பரவல் குறைந்து வருகிறது. இதனால் பல கட்டங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்காரணமாக அரசு மிகுந்த கவனத்துடன் மக்கள் கூடும் பகுதிகளில் எச்சரிக்கை விடுத்து வருகிறது. முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள் என்ற விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறது. ஆனாலும் சில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடுவதால் குறிப்பிட்ட கடை வீதிகளை அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர்.
அதன்படி சென்னையில் தி.நகர் ரெங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாரிமுனை பகுதி, புரசைவாக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது. கோவையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (06.08.2021) சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை அடுத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கில் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் படிப்பு, மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மருத்துவ பணியாளர்கள் என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்தியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
மற்ற செய்திகள்