தமிழகத்தில் 'மே 31' வரை ஊரடங்கு நீட்டிப்பு... இந்த '25' மாவட்டங்களுக்கு மட்டும்... சில 'முக்கிய' தளர்வுகள் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி நான்காம் கட்ட ஊரடங்கு உண்டு என்றும் அது குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மே மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களில் சில முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது:
அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயங்க E pass இல்லாமல் இயங்க தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று வர TN e-pass பெற்றும் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.
அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி பெற்று இயங்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற கார்களில் 3 நபர்களும், சிறிய காரில் இரண்டு நபர்களும் பயணிக்கலாம்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 50 % தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
வாடகை டாக்சிகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
இந்நிலையில், கல்வி நிறுவனங்கள், திருமண நிகழ்ச்சிகள், வழிபாடுத் தலங்கள், அரசியல் கூட்டங்கள், பொது போக்குவரத்து சேவைகளான ரெயில், பஸ், விமானம் மீதான நடைமுறையில் இருக்கும் தடைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.