'3 வருஷ லவ் சார்'... 'கல்யாணத்துக்கு கால் டாக்ஸி டிரைவர் போட்ட பட்ஜெட்' ... அசந்து போன சொந்தக்காரர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு நேரத்தில் திருமணம் செய்வது என்பது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் இரண்டாயிரம் ரூபாயில் திருமணத்தை நடத்தி அசத்தியுள்ளார்.

'3 வருஷ லவ் சார்'... 'கல்யாணத்துக்கு கால் டாக்ஸி டிரைவர் போட்ட பட்ஜெட்' ... அசந்து போன சொந்தக்காரர்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர், கண்ணன். கால் டாக்ஸி ஓட்டுநரான இவரும், மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரியா என்ற இளம் பெண்ணும் 3 வருடங்களாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்கள். இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வர, அவர்களும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து உள்ளார்கள். இதையடுத்து திருமண பேச்சு ஆரம்பித்த நேரம் பார்த்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில், இன்னும் சில நாட்களில் ஊரடங்கு சரி ஆகிவிடும் திருமண பேச்சை ஆரம்பித்து விடலாம் எனக் காதல் ஜோடி மகிழ்ச்சியில் இருந்துள்ளார்கள். ஆனால் ஊரடங்கு தொடர்ந்து கொண்டே சென்றதால், இருவரும் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள். அப்போது தான் மணமகன் கண்ணனுக்கு ஒரு ஐடியா உதயமானது. ஏன் ஊரடங்கு முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும், அதற்கு முன்பே திருமணத்தை முடித்து விடலாம் என இரு வீட்டாரிடமும் அவர் கூறியுள்ளார். அதற்காக பட்ஜெட் போட்ட அவர், மிகவும் எளிமையாகத் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டார்.

இந்நிலையில் இருவீட்டாரைச் சேர்ந்த ஐந்து பேருடன் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று  மானாமதுரை விநாயகர் கோயிலில் மாலை மாற்றி திருமணம் நடந்தது. பெண் வீட்டார் இரண்டு பேர், மாப்பிள்ளை வீட்டார் மூன்று பேர், மணமக்கள் இரண்டு பேர் என மொத்தம் ஏழு பேர் கலந்துகொள்ளத் திருமணம் நடந்தது. மாலை, திருமாங்கல்யம், அர்ச்சனை உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து வெறும் இரண்டாயிரம் ரூபாய் செலவில் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது.

அதோடு வீட்டிலிருந்து நடந்து சென்று திருமணம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு நடந்தே வந்து விட்டனர். வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோயில் என்பதால் வேறு எந்த செலவும் இல்லை. மணமகன் கண்ணனின் எளிமையான இந்த அணுகுமுறையைப் பார்த்த சொந்தக்காரர்களும் அசந்து தான் போனார்கள். இதற்கிடையே ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வரவேற்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.