‘சாக்லேட் என நினைத்து’... 'ரசாயனத்தை சாப்பிட்ட'... 'எல்கேஜி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை அருகே சாக்லேட் என நினைத்து வேதிப்பொருளை சாப்பிட்ட எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே காரம்பூண்டி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் பள்ளியில், அறிவியல் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் எல்.கே.ஜி. வகுப்பறையின் அருகே கிடந்துள்ளது. இதைப் பார்த்த எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. படிக்கும் மாணவ மாணவிகள், சாக்லேட் என நினைத்து, அதனை எடுத்து சாப்பிட்டுப் பார்த்துள்ளனர்.
அப்போது நாக்கில் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக மாணவர்கள் சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கேட்டு அருகில் இருந்த ஆசிரியர்கள் ஓடி வந்துப் பார்த்துள்ளனர். பின்னர் உடனடியாக மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டுபோய் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சைக்குப் பிறகு 8 மாணவர்களும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.