"Like பண்ணுங்க.. Subscribe பண்ணுங்க!.. ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்!".. நம்பிய இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!.. ‘இணையத்தில்’ அரங்கேறிய ‘மெகா மோசடி’! உஷார் மக்களே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஃபேஸ்புக் மற்றும் யூடியூபில் லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த செயலிகள் குறித்து சென்னை சைபர் காவல்நிலையங்களில் புகார் குவிந்த வண்ணம் உள்ளன.
யூடியூபில் அதிக லைக்குகளையும், சப்ஸ்கிரைபர்களையும் கொண்டுள்ளவர்களுக்கு யூட்யூப் நிறுவனமே டாலர்களில் வருவாயை தரும். அத்துடன் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரங்கள் மூலமும் சம்பாதிக்கலாம். ஆனால் மக்கள் அவ்வளவு எளிதாக லைக் போடவும், சப்ஸைகிரைப் பண்ணவும் மாட்டார்கள். இதனை அடிப்படையாக வைத்து லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி, மீ சேர் (me share) மற்றும் லைக் சேர் (like share) உள்ளிட்ட செயலிகளை உருவாக்கி மோசடிகளை செய்துள்ளனர். ஆனால் இவற்றை ப்ளே ஸ்டோர் மூலமாகவும் பதிவிறக்கம் செய்ய முடியாது. தனி லிங்குகள் மூலமாகதான் பதிவிறக்கம் செய்யமுடியும்.
குறிப்பாக மீ சேரில் இலவசமாக 3 யூடியூப் வீடியோக்களுக்கோ அல்லது பேஸ்புக் வீடியோக்களுக்கோ லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்தால், ஒரு லைக் மற்றும் சப்ஸ்க்ரைப்பிற்கு 8 ரூபாய் வரையிலும் சம்பாதிக்கலாம். இந்த பணம் , அந்த செயலியின் வாலட்டில் சேர்ந்துவிடும். அதன் பிறகும் சம்பாதிக்க, அப்டேட், ஏங்கர், இண்டெர்னட் செலிபிரிட்டி, ஆஸ்கர், கிங்க் என பல பெயரில் திட்டங்கள் உள்ளன.
1000 ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை இந்த செயலிக்கு பணம் செலுத்தி இந்த திட்டங்களில் சேர்ந்தால் ஒரு வீடியோவிற்கு 8 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை திட்டங்களுக்கு ஏற்ப பணம் சம்பாதிக்க முடியும் என்றும் குறிப்பாக கிங் திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு 100 வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்து, மொத்தமாக ஒரு நாளைக்கு 1800 ரூபாயும், மாதம் 54 ஆயிரம் வரையும் சம்பாதிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்ததை பார்த்து ஆசைப்பட்ட பலரும் இந்த செயலியில் பல திட்டங்களில் பணத்தை செலுத்தியதுடன்,
எம்.எல்.எம் போன்று யாரையாவது சேர்த்துவிட்டால், கமிஷன் கிடைக்கும் என்று கூறியதையும் நம்பி பலரை சேர்த்துவிட்டு ஏமார்ந்தனர்.
ஆனால் சம்பாதிக்க ஆரம்பித்த 3 நாட்களில் இந்த செயலி செயலிழந்து விடுவதுடன் அதன் பின்னர் இந்த கும்பல் மீ சேர் எனும் ஆப்பினை தொடங்கி டெலிகிராம் குழுவும்,வாட்ஸப் குழு அமைத்து மோசடி செய்துள்ளதைக் கண்டு அதிர்ந்த இளைஞர்கள் சென்னை சைபர் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.
அத்துடன் ஏமார்ந்தவர்கள் செலுத்திய பணம், சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் வங்கியில் உள்ள வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது தெரியவந்தது. லைக் மற்றும் சப்ஸ்கரைப் செய்தால் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் ஆசை காட்டி பண மோசடி செய்த இந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மற்ற செய்திகள்