'இது' இல்லாவிட்டால்.. நிறுவனங்கள், கடைகளின் உரிமம் ரத்து.. காவல் துறை முக்கிய அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை: நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
நகரின் முக்கிய பகுதிகளில் குற்றங்களை குறைக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. வீடு, கடை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பொதுமக்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றம் நடந்தால் அதில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும், 'சிசி டிவி' கேமராக்கள் பேருதவியாக இருக்கின்றன. நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சாலை சந்திப்புகள், பொதுமக்கள் வந்து செல்லும் அரசு, தனியார் கட்டடங்கள், பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்களில் 'சிசி டிவி' கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்த, உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணியை உடனடியாக செய்யுமாறு, கடைக்காரர்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். அதனடிப்படையில், கோவை மாநகராட்சியில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு, நிறுவனங்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக, மாநகரில் இருக்கும் கடை, வணிக நிறுவனம், வணிக வளாகம் அனைத்தையும் நேரில் ஆய்வு செய்து கேமரா உள்ளதா, இல்லையெனில் எத்தனை கேமராக்கள் தேவை என்பதை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க, போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கடை, அலுவலகம், நிறுவனத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். பொருத்தாவிட்டால், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல, கடை, நிறுவனம், அலுவலகத்தின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை பரிந்துரை
சிசிடிவி கேமராக்களை பெயரளவுக்கு பொருத்தாமல், அதில் பதிவாகும் காட்சியை குறிப்பிட்ட நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும்.
அரசு உத்தரவைத் தொடர்ந்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகளுக்கு சென்று கேமராக்களை பொருத்த காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்