‘நைட் யாரும் காட்டுல தங்க வேண்டாம்’.. கன்றுக்குட்டிகளை கடித்து குதறிய மிருகம்.. பீதியில் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏழுமலை அருகே கன்றுக்குட்டிகளை சிறுத்தை கடித்துக் கொன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஏழுமலை அருகே அண்ணா தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமாக மொட்டனூத்து அருகே தோட்டம் உள்ளது. அங்கு பசு மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக சென்றபோது, 2 கன்றுக்குட்டிகள் கொடூரமாக கடிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளன. மற்றொரு கன்றுக்குட்டி பலத்தக் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடந்த சேகர் உடனே கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதேபோல் கடந்த 21ம் தேதி பிச்சைப்பாண்டி என்பவரது கன்றுக்குட்டியும் கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தது. இவற்றை சிறுத்தை கடித்துக் கொன்றதாக தகவல் பரவியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி, ‘இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கிடையாது. கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு கன்றுக்குட்டிகளை என்ன விலங்கு கடித்தது என்று தெரியவரும். இரவு நேரங்களில் யாரும் தோட்டங்களில் தங்க வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.