'நாயை கூட்டிட்டு வாக்கிங் போகாதீங்க'... 'எப்போ வேணாலும் அட்டாக் பண்ணும்'... அதிர்ச்சியில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

'நாயை கூட்டிட்டு வாக்கிங் போகாதீங்க'... 'எப்போ வேணாலும் அட்டாக் பண்ணும்'... அதிர்ச்சியில் மக்கள்!

மேற்குத் தொடர்ச்சி மலையான நீலகிரி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, கரடி, யானை, மான், வரையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. பொதுவாகக் கோடைக் காலங்களில் தண்ணீர் மற்றும் இரையைத் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். மேலும் வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால், சிலநேரம் அவை  வழிமாறி ஊருக்குள் வந்துவிடுகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளது வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி. இந்த பள்ளி வளாகத்திற்குள் நள்ளிரவில் சிறுத்தை புகுந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவ குடும்பத்தினர் காலை, மாலை நேரங்களில் நாய்களுடன் நடைப்பயிற்சி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சிறுத்தை உணவிற்காக நாய், கோழிகளைத் தேடி வருகிறது. எனவே நாய்களுடன் யாரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். மேலும் குன்னூர் ராணுவ மையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே சிறுத்தை ஊருக்குள் நடமாடத் தொடங்கியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

CCTV, LEOPARD, WELLINGTON ARMY SCHOOL, COONOOR