'நடு ரோட்டில் கதறிய கர்ப்பிணி'...'தாயாக மாறிய இன்ஸ்பெக்டர்'...சென்னை மக்களை நெகிழ வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பிரசவம் பார்த்த சம்பவம் சென்னை மக்களை நெகிழ செய்துள்ளது.
சென்னை சூளைமேடு சவுராஷ்ட்ரா நகரைச் சேர்ந்தவர் பானுமதி. நிறைமாத கர்ப்பிணியான இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் உதவிக்கு ஒருவர் கூட இல்லாத நிலையில், மருத்துவமனைக்கு செல்வதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு நடந்தே வந்துள்ளார். ஆனால் அவருக்கு வலி மேலும் அதிகமாக, சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சூளைமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா, இதனை கவனித்து பதறி போய் கர்ப்பிணி பானுமதியை மீட்டு அமர வைத்துள்ளார். இதனிடையே பானுமதி மீண்டும் வலியால் துடிக்க, நிலைமையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் அங்கிருந்த பெண் துப்புரவு தொழிலாளியுடன் இணைந்து பிரசவம் பார்த்துள்ளார்.
இதையடுத்து பானுமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்பு தாயும் சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வலியால் துடித்த கர்ப்பிணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதோடு அவருக்கு பிரசவம் பார்த்த இன்ஸ்பெக்டரின் செயல் சென்னை மக்களை நெகிழ செய்துள்ளது.