'முதுகெலும்பில்லாத கூட்டம்'.. வன்னி அரசின் காட்டமான கேள்விக்கு நடிகை குஷ்பு கொந்தளிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்நாடகாவில் நடைபெற்றுவரும் ஹிஜாப் விவகாரத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்திருந்தார். அதில், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த பெண்ணிடம் கூச்சலிட்ட மாணவர்களின் வீடியோ இடம்பெற்றிருந்தது. தனது பதிவில்,"இந்தக் கொடுமையை கண்ட பிறகும் உங்களது கள்ளமவுனமும் சுயநலமும் அமைதி காக்கச்சொல்கிறதா?
இதே தாக்குதலும் அச்சுறுத்தலும் சங் பரிவாரக்கும்பலால் நாளை உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படாது என நம்புகிறீர்களா குஷ்பு மேடம்?" எனக் கேட்டிருந்தார்.
When u n ur party didn’t allow me to take my 5yr old daughter to hospital when she was battling dengue in 2005 by sorrounding my home n holding me hostage, I didn’t see any sangh parivaar there, It was u n ur pack of coward spineless thugs. I am yet to see more thugs like you. https://t.co/0sOFUkzvCK
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 10, 2022
இதற்கு பதிலளித்திருந்த நடிகை குஷ்பு," 2005 ஆம் ஆண்டு என்னுடைய 5 வயது மகள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கூட விடாமல் என்னுடைய வீட்டினைச் சூழ்ந்துகொண்டு போராட்டம் நடத்தினீர்கள். அப்போது நான் எந்த சங்க பரிவார உறுப்பினரையும் பார்க்கவில்லை. நீங்கள் முதுகெலும்பில்லாத கூட்டத்தினைச் சேர்ந்தவர்" என காரசாரமாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் களமாடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக பள்ளி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும்" என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புர்கா என் உரிமை
இந்நிலையில் நேற்று காலை பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். உடனே கல்லூரி ஊழியர்கள் வந்து அப்பெண்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கோஷங்கள்.. கொடிகள்..
இதனிடையே முஸ்லீம் மாணவிகளுக்கு எதிராக சில மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தையும் மாணவிகளுக்கு ஆதரவாக சிலர் ஜெய்பீம் முழக்கத்தையும் எழுப்பியது சர்ச்சையானது. அதேபோல, மாணவர் ஒருவர் தேசியக்கொடி பறக்கும் கம்பத்தில் காவி கொடியை பறக்கவிட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட சலசலப்பை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் கர்நாடகாவில் அனைத்து உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.
மற்ற செய்திகள்