'2 பேரும் உயிரை மாய்ச்சுக்கலாம்!'.. 'விஷம்' கலந்த 'வாழைப்பழம்' கொடுத்த 'காதலன்'.. நம்பி சாப்பிட்ட காதலிக்கு நேர்ந்த 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கும்பகோணம் அருகே ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த, நந்தவனம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனியார் மகளிர் சுய உதவிக்குழு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கோபிநாத பெருமாள்கோயில் கிராமத்தைச் சேர்ந்த, ஐயப்பன் என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக ஐயப்பன் பணியாற்றி வந்தபோது, அங்கு +2 படித்த அப்பெண்ணுக்கும் ஐயப்பனுக்கும் காதல் தொடங்கியது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின், தற்போது அப்பெண் திடீரென ஐயப்பனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஐயப்பன் விசாரித்தபோது, அப்பெண் வேறொரு இளைஞருடன் நட்பாக பேசி வந்தது தெரியவந்தது.
இதுபற்றி அந்த பெண்ணிடம் ஐயப்பன் கேட்டபோது, ‘நாங்கள் இருவரும் நட்பாகத்தான் பேசினோம். சந்தேகப்படாதே. நீ நினைப்பது போல் ஒன்றும் இல்லை’ என்று அந்த பெண் கூற, இதனால் சமாதானம் அடையாத ஐயப்பன், அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் தன்னுடைய பைக்கிலேயே வீட்டுக்கு கொண்டு வந்து விட்டுவிடுகிறேன் என்று கூறி, காதலியை அழைத்துக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு, ரெட்டிப்பாளையம் அருகே உள்ள இருட்டான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு, தன் காதலியிடம், ‘இனி நாம் சேரவும் வேண்டாம். வாழவும் வேண்டாம். இந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை உண்டு இருவருமே உயிரை மாய்த்துக்கொள்வோம்’ எனக் கூறி விஷம் கலந்த வாழைப்பழத்தைக் கொடுத்துள்ளார். தானும் உண்டுள்ளார். ஆனால் ஐயப்பன் உண்டதோ விஷம் கலக்காத வாழைப்பழம்.
தன் விஷம் கலந்த வாழைப்பழத்தை தன் காதலிக்கு மட்டுமே கொடுத்துள்ளார். அதன் பின் வீட்டுக்கு சென்ற அப்பெண், தனது தந்தையிடம் நடந்ததைக் கூறி மயங்கி விழ, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். அதன் பின் அப்பெண்ணின் பெற்றோர் கதறியுள்ளனர். இதனையடுத்து ஐயப்பனை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.