தந்தை ‘வெளியே’ அழைத்ததும்... ‘ஆசையாக’ கிளம்பிய ‘மகள்கள்’... ‘மனம்’ மாறி ‘காப்பாற்ற’ முயன்றும் நேர்ந்த ‘கொடூரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவில்பட்டியில் 2 மகள்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் டேவி குமார் (36). இவருடைய மனைவி மகாலட்சுமி (32), மகள்கள் ஷைனி ஜெயசத்யா (11), ஜெசிகா ராணி (9). இந்நிலையில் டேவி குமாருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடன் பிரச்சனையில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தலால் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஷைனி ஜெயசத்யா, ஜெசிகா ராணி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை டேவி குமார் தன்னுடைய 2 மகள்களையும் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக பள்ளி விடுமுறை காரணமாக வீட்டிலேயே இருந்த 2 குழந்தைகளும் மகிழ்ச்சியாக தந்தையுடன் புறப்பட்டு சென்றுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போலீசாரிடம் சிக்காமல் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக மாற்றுப்பாதையில் வேலாயுதபுரம் - சாத்தூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு 2 மகள்களையும் டேவி குமார் அழைத்து சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து 2 மகள்களையும் அங்குள்ள கிணற்றில் தள்ளிவிட்ட டேவி குமார் தானும் அந்த கிணற்றில் குதித்துள்ளார். பின்னர் மகள்கள் 2 பேரும் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட மனம் மாறிய டேவி குமார் குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் பதறிப்போன அவர் கிணற்றில் தொங்கிய கயிறை பிடித்து மேலே ஏறிவந்து நண்பர் ஒருவருக்கு போன் செய்து நடந்ததைக் கூறிவிட்டு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கியுள்ளார்.
இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குழந்தைகளின் உடல்களை மீட்டுள்ளனர். பின்னர் 2 பேருடைய உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2 மகள்களின் உடல்களையும் பார்த்து அவர்களுடைய தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியினரை சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே இலுப்பையூரணி கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்த டேவி குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.