'பாக்க பணக்கார லுக்'...'நம்பி போன பட்டதாரிகள் '...வாழ்க்கையை காவு வாங்கிய இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கனடா நாட்டில் இருப்பதாக நடித்து, பட்டதாரி இளைஞர்களிடம்  2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சுருட்டிய இளைஞரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பாக்க பணக்கார லுக்'...'நம்பி போன பட்டதாரிகள் '...வாழ்க்கையை காவு வாங்கிய இளைஞர்!

மதுரையில் பெஸ்ட் கன்சல்டென்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்றை பல வருடங்களாக நடத்தி வருபவர் சிவக்குமார். இவருக்கு கடந்த 2016 ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த சையது அசாருதின் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். அவர் தான் கனடா நாட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து அவரை கனடா அனுப்ப சிவக்குமார் முயற்சியில் இறங்க, அது காலதாமதம் ஆகியுள்ளது.

இதனிடையே அசாருதின் தனது உறவினரான வழக்கறிஞர் அப்துல்கசாப் மூலம் கனடாவில் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துவிட்டதாக சிவகுமாருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய சிவகுமார், அசாருதினிடம் நட்பாக பழகியுள்ளார். அவ்வப்போது கனடா தொலைபேசி எண்ணில் இருந்து சிவக்குமாரை தொடர்பு கொண்டு பிஎம்டபிள்யூ, வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுவதாகவும், அங்கு தனது உறவினரான வழக்கறிஞர் மூலம் ஒர்க்பெர்மிட் வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் பட்சத்தில் அதற்கு கமிஷனாக ஒரு நபருக்கு வேலைக்கு தக்கபடி 50 ஆயிரம் ரூபாய் முதல், 1லட்சம் ரூபாய் வரை கமிஷன் எடுத்துக்கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அதோடு இந்த பணிகளுக்காக தனது வங்கி கணக்கிற்கு 20 லட்ச ரூபாயை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய சிவகுமார் வெளிநாடு செல்ல ஆர்வமாக இருந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பேசி, அவர்களிடம் இருந்து 30 லட்ச ரூபாயை வசூல் செய்து  அசாருதினுக்கு அனுப்பியுள்ளார்.

அதோடு  அவருடைய சகோதரி தாஸ்லிம் வங்கி கணக்கில் 70 லட்ச ரூபாய் என 2 கோடி ரூபாய் வரை செலுத்தியதாக கூறப்படுகின்றது. ஆனால் பணத்தை வாங்கி கொண்ட அசாருதின் ஒருவரை கூட கனடாவிற்கு வேலைக்கு அழைத்து செல்லவில்லை. ஒரு கட்டத்தில் பணம் கொடுத்த இளைஞர்கள் சிவகுமாருக்கு நெருக்கடி கொடுக்க, அவர் தனது சொத்துகளை விற்று சில இளைஞர்களுக்கு பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து அசாருதினை தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சிவகுமார் கேட்டுள்ளார்.

அப்போது தான் அசாருதினின் உண்மை முகம் சிவகுமாருக்கு தெரியவந்துள்ளது. '' தனக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே பணத்தை திரும்ப கேட்டால் உன்னை கொலை செய்து விடுவதாகவும்'' அசாருதின் மிரட்டியுள்ளார். இதையடுத்து அசாருதினின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கும் போது தான் சிவகுமாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கோவையில் இருந்து கொண்டு கனடா நாட்டில் இருப்பது போன்று நடித்து, அசாருதின் கோடிகளை சுருட்டியது பின்னர் தெரியவந்தது.

தான் சுருட்டிய பணத்தில் லம்போகினி, டுக்காட்டி உள்ளிட்ட விலை உயர்ந்த சொகுசு வாகனங்களை அசாருதின் வாங்கியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து புகைப்பட ஆதாரங்களுடன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவகுமார் புகார் அளித்ததையடுத்து, அசாருதின் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் வேலை என பல பட்டதாரி இளைஞர்களின் வாழ்க்கையில் அசாருதின் விளையாடி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MADURAI, CHEATING, ARRESTED, CONSULTANCY