Video: கோலத்துடன்... பேக்கிரவுண்ட் 'மியூசிக்'கையும் சேர்த்து போட்டு... 'தெறிக்க' விட்ட இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோலமிட்டு 6 பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து திமுக மகளிரணியில் உள்ள பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கோலம் போட்டு, எதிர்ப்பை காட்ட வேண்டும் என கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார்.
கட்சித்தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் இந்த அழைப்பை விடுப்பதாக அவர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை ஏற்று பெண்கள் அனைவரும் தங்கள் வீடு வாசல்களில் இன்று கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களும் இந்த கோலம் போராட்டத்தில் கலந்து கொண்டு கோலங்கள் போட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ, #KolamProtestAgainstCAA என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
என்னங்கடா Background Music லாம் போட்டு தெறிக்கவிடுறீங்க 🔥😂🔥😂🔥#DMKkolamProtest#DMKagainstCAA pic.twitter.com/N95HuWVw8Q
— River🔥 (@RiverFiree) December 30, 2019
இந்தநிலையில் இந்த கோலங்கள் அனைத்தையும் தொகுப்பாக மாற்றி கோலங்கள் சீரியலில் வரும் பாடலை பேக்கிரவுண்ட் மியூசிக்காக பின்னணியில் சேர்த்து, வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இன்று காலை கனிமொழி எம்பி இல்லம், திமுக தலைவர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு ஆகியவற்றிலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக வாசலில் கோலம் போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.