'திடீரென அடித்த ஜாக்பாட்' ... 'தலை தெறிக்க போலீஸ் ஸ்டேஷன் ஓடிய தொழிலாளி'... சுவாரசிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளாவில் லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்ததும், தொழிலாளி ஒருவர் காவல்நிலையத்திற்கு ஓடிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் தஜ்முல்ஹக். மிகவும் வறுமையான குடும்ப நிலையில் இருந்த இவர், கட்டிட தொழில் செய்து பிழைத்து கொள்ளலாம் என, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வந்து தங்கியுள்ளார். இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரள அரசின் காருண்யா பாக்கியஸ்ரீயின் ரூ.1 கோடி லாட்டரிச் சீட்டை தஜ்முல்ஹக் வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்தது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு பயமும் தொற்றி கொண்டது.
தனக்கு பரிசு விழுந்தது யாருக்காவது தெரிந்து, அவர்கள் தனது லாட்டரி சீட்டினை பறித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம் அவரை வாட்டியது. அந்த நேரத்தில் தான் அவருக்கு யோசனை ஒன்று தோன்றியது. யோசனை தோன்றிய சிறிது நேரத்தில் தனது லாட்டரி சீட்டுடன் காவல்நிலையத்திற்கு ஓடினார். ஆனால் அவரது மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. காவல்நிலையம் சென்ற தஜ்முல்ஹக், தான் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. எனவே நீங்கள் எனக்கு அந்த பணத்தை பாதுகாப்புடன் வாங்கி தர வேண்டும், என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தார்.
தஜ்முல்ஹக்கின் கோரிக்கையை வியப்புடன் பார்த்த காவல்துறையினர், லாட்டரிச் சீட்டை வாங்கி பார்த்து அந்த சீட்டுக்கு ரூ.1 கோடி கிடைத்து இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை அங்குள்ள வங்கிக்கு அழைத்துச் சென்றனர். லாட்டரிச் சீட்டில் கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
இதனால் நிம்மதி பெருமூச்சு அடைந்த தஜ்முல்ஹக், காவல்துறையினருக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். மேலும் இவ்வளவு நாட்கள் குழந்தைகளை வைத்து மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்ததாகவும், இனிமேல் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்குவேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.