‘இது என்ன வித்தியாசமா இருக்கு’!.. பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்த இளைஞர்’.. நொடியில் நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குளித்தலை அருகே மர்மப் பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (34). விவசாயியான இவர், பொங்கல் பண்டிகை வருவதால் வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டிக்குள் மர்மப் பொருள் ஒன்று இருந்துள்ளது. அதைப் பார்த்த சுதாகர், ‘என்ன இது, வித்தியாசமா இருக்குதே’ என பக்கத்து அறையில் இருந்த தனது மனைவிடம் கூறிக்கொண்டே, அதை எடுத்துள்ளார்.
அப்போது அந்த பொருள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. வீட்டுக்குள் வெடி வெடித்ததுபோல் சத்தம் கேட்டு பதறிப்போன, சுதாகரின் பெற்றோரும், மனைவியும் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது சுதாகர் உடலில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு சுதாகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார், சிதறிக் கிடந்த மர்மப் பொருள்களை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். மர்மப் பொருள் வெடித்து உயிரிழந்த சுதாகருக்கு திருமணமாகி 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் சுதாகர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News Credits: Vikatan