‘சம்பள பாக்கியை வாங்கிக் கொடுங்க’.. ‘இல்லன்னா..!’.. செல்போன் டவர் உச்சியில் நின்று அதிர்ச்சி கொடுத்த நபர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சம்பள பாக்கியை தர மறுத்ததால் கட்டிடத் தொழிலாளி ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சம்பள பாக்கியை வாங்கிக் கொடுங்க’.. ‘இல்லன்னா..!’.. செல்போன் டவர் உச்சியில் நின்று அதிர்ச்சி கொடுத்த நபர்..!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த முத்து (50) என்பவர், கரூர் மாவட்டம் தென்னிலைப் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். குடும்பத்துக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்க கூட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தென்னிலைப் பகுதியை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் மூலமாக முத்து கட்டிட வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். தினமும் வேலை பார்த்து வரும் சம்பளத்தொகையை முழுவதுமாக வாங்காமல் சாப்பாட்டுக்கு மட்டும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். தனக்கு தேவைப்படும் போது முழுப்பணத்தையும் வாங்கிக்கொள்வதாக முத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் தனக்கு வரவேண்டிய நிலுவை சம்பளத்தொகையை கட்டிட கான்ட்ராக்டரிடம் முத்து கேட்டுள்ளார். ஆனால் கான்ட்ராக்டர் பணத்தை தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த முத்து, தென்னிலை காவல் நிலையத்துக்கு பின்புறம் உள்ள 250 அடி உயரமுள்ள செல்போன் டவரின் உச்சிக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முத்துவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கான்ட்ராக்டரிடம் முழு சம்பளத்தொகையையும் வாங்கிக் கொடுத்தால்தான் கீழே இறங்குவேன் என முத்து தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட கட்டிட கான்ட்ராக்டரிடம் முழு சம்பளத்தொகையையும் வாங்கி தீயணைப்பு வீரர்கள் மூலம் டவரில் இருந்த முத்துவிடம் கொடுத்து அவரை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக முத்து மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்