LIGER Mobile Logo Top

பலமுறை கால் செஞ்சும் எடுக்காத பெற்றோர்.. பதறிப்போன மகள்.. கொஞ்ச நேரத்துல பரபரப்பான கரூர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூரில் வயதான தம்பதியர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இதுகுறித்து பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலமுறை கால் செஞ்சும் எடுக்காத பெற்றோர்.. பதறிப்போன மகள்.. கொஞ்ச நேரத்துல பரபரப்பான கரூர்..!

வயதான தம்பதி

கரூர் ஜவகர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். 75 வயதான இவர் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி ஸ்ரீ லக்ஷ்மி. 70 வயதான லக்ஷ்மிக்கு கடந்த 6 வருடங்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டு இருந்திருக்கிறது. இந்த தம்பதியின் இரண்டு மகள்களும் திருமணமாகி தங்களது கணவருடன் வெளியூரில் வசித்துவருகின்றனர். இதனிடையே, ஸ்ரீ லக்ஷ்மியின் உடல்நிலை சமீப ஆண்டுகளில் மோசமாகவே அவர் படுக்கையில் இருந்து வந்ததாக தெரிகிறது. ராமகிருஷ்ணன் தனது மனைவியை கவனித்து வந்திருக்கிறார்.

வயதான சூழ்நிலையில் தனிமையில் வசித்துவந்த ராமகிருஷ்ணன் - ஸ்ரீ லக்ஷ்மி தம்பதிக்கு இவரது மகள்கள் தினந்தோறும் போன் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவும் மகள்களுடன் இந்த வயதான தம்பதியினர் பேசியிருந்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை மகள் தனது பெற்றோருக்கு போன் செய்திருக்கிறார். பலமுறை போன் செய்தும், யாரும் எடுக்காததால் அச்சமடைந்த அவர் அண்டை வீட்டாருக்கு போன் செய்து விபரத்தை கூறி, உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்க்கும்படி கூறியிருக்கிறார்.

உடைக்கப்பட்ட கதவு

இதனையடுத்து வயதான தம்பதியின் வீட்டை அண்டை வீட்டார் தட்ட, அது உள்பக்கமாக தாழிடப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால் குழப்படைந்த மக்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போது, கணவன் சமையல் அறையிலும், மனைவி படுக்கையிலும் இறந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனடியாக தம்பதியின் இரு மகள்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே காவல்துறைக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக விரைந்துவந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கரூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வயது மூப்பின் காரணமாக இருவரும் உயிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் கணவன் - மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இறந்துள்ளதால் காவல்துறையினர் தங்களது விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

KARUR, ELDERLYCOUPLE, POLICE, கரூர், வயதானதம்பதி, போலீஸ்

மற்ற செய்திகள்