அப்பாவை ‘குச்சியால்’ அடித்த பால் வியாபாரி.. ‘பழிக்குப்பழி’ வாங்க மகன் செய்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தையை குச்சியால் அடித்த பால் வியாபாரியை மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாடுவிழுந்தான் பாறை கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (28). பால் வியாபாரியான இவர் கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் பால் கேனுடன் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்மகும்பல் அன்பழகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அன்பழகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அன்பழகனை கொலை செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கதிரேசன், குமார், வினோத், ராஜேஷ் ஆகிய நான்கு பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின.
கடந்த 25 நாட்களுக்கு முன்பு கதிரேசனும் அவரது நண்பர்களும் தங்கள் நண்பர் குழந்தை பிறந்தநாள் விழாவிற்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு நடந்து வந்துள்ளனர். அப்போது தங்களுக்குள் ஆபாச வார்த்தைகளில் பேசிக்கொண்டே வந்துள்ளனர். அந்த சமயம் எதிரில் வந்த பால் வியாபாரி அன்பழகன் தன்னைதான் அவர்கள் திட்டுவதாக நினைத்து அவர்களுடன் தகராறு செய்துள்ளார்.
இதனை அடுத்து அன்பழகன் தனது நண்பர்கள் சிலருடன் கதிரேசனின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார். அப்போது கதிரேசனின் தந்தை, தனது மகனை மன்னித்து விடுங்கள் என கெஞ்சியுள்ளார். ஆனால் அன்பழகன் தான் கையில் வைத்திருந்த குச்சியால் கதிரேசனின் தந்தையை அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கதிரேசன் தனது தந்தையை அடித்ததற்கு பழிக்குப்பழியாக நண்பர்களுடன் சேர்ந்து அன்பழகனை வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.