'90 பொண்ணுங்க வாழ்க்கைய சீரழிச்சிருக்கான் சார்!'.. ஆண்மை பரிசோதனை... அரசியல் தொடர்பு!.. கன்னியாகுமரி சுஜி வழக்கில் என்ன நடக்கிறது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சுஜி என்ற காசியின் வழக்கு ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அதே நிலையில்தான் இப்போதும் உள்ளது எனவும், காசியை மொத்தம் ஒன்பது நாள்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

'90 பொண்ணுங்க வாழ்க்கைய சீரழிச்சிருக்கான் சார்!'.. ஆண்மை பரிசோதனை... அரசியல் தொடர்பு!.. கன்னியாகுமரி சுஜி வழக்கில் என்ன நடக்கிறது?

சென்னை, கன்னியாகுமரி மட்டுமன்றி தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் இன்ஜினீயர் சுஜி என்ற காசி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரைக் காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்ததுடன் அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதுகுறித்து சென்னை பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்ஜினீயர் சுஜி கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி ஒருவரை காதலித்து ஏமாற்றியதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், நேசமணிநகர் காவல்நிலையம் உள்ளிட்டவைகளில் இளம்பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதியப்பட்டன. மேலும், கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து அதிக பணம் வாங்கியதுடன் ஹார்லி டேவிட்சன் பைக்கை பறித்துக்கொண்டதாக ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டி சம்பந்தமான வழக்கும் போடப்பட்டுள்ளது. இன்ஜினீயர் சுஜி மீது பெண்கள் மற்றும் சிறுமி ஆகியோரை காதலிப்பதாக ஏமாற்றியதாக ஐந்து வழக்குகளும் ஒரு கந்துவட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

சென்னை பெண் மருத்துவரை ஏமாற்றி அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த வழக்கில் ஏற்கெனவே மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில், சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் ஆறு நாள்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் விசாரணையின் கடைசி நாளான இன்று சாதாரண மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கோர்ட்டில் ஆஜராக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஜினீயர் சுஜிக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என போலீஸ் தரப்பில் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவது வழக்கமான நடைமுறைதான்" என்றனர். தமிழகம் முழுவதும் பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி மோசடி செய்த இன்ஜினீயர் சுஜி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சுஜி என்ற காசி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சி.பி.எம் குமரி மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி கூறுகையில், "சுஜி என்ற காசி வழக்கு ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அதே நிலையில்தான் இப்போதும் உள்ளது. காசியை மொத்தம் ஒன்பது நாள்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. 90-க்கும் அதிகமான பெண்களை காசி ஏமாற்றியதாகவும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் காசியுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியும் அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும். இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

 

மற்ற செய்திகள்