பேங்க் அக்கவுண்ட்டை ‘ஹேக்’ செய்து லட்ச கணக்கில் கொள்ளை..! சொந்த ஊருக்கு வந்த இஞ்ஜினியருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இஞ்ஜினியரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்காண ரூபாயை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டம் அருகே உள்ள முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபின் பெலிக்ஸ் ராஜன். இஞ்ஜினியரான பிரவின் கடந்த 7 வருடங்களாக நைஜீரியாவில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அடுத்து நாள் (மார்ச் 10) ஏடிஎம்-ல் இருந்த பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது வங்கிக் கணக்கைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரவின் வங்கிக் கணக்கில் இருந்து, அவர் நைஜிரியாவில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்த மார்ச் 8ம் தேதி 97,407 ரூபாயும், மார்ச் 9ம் தேதி 95,933 ரூபாயும் இணைய வழி வங்கி மூலமாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மறுநாள் சம்பந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி புகார் அளித்துள்ளார். புகார் அளிக்க சென்ற அன்று இரவும் பிரவினின் வங்கி கணக்கில் இருந்து 85,273 ரூபாய் இணைய வழி பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் வங்கி மேலாளிடம் தனது இணைய வழி வங்கி சேவையை முடக்க கேட்டுள்ளார். ஆனால் வங்கி அலுவலர்கள் முறையான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு மாத விடுப்பு முடிந்ததால் பிரவின் மீண்டும் நைஜிரியாவுக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த மாதம் 11ம் தேதி மீண்டும் பிரவினின் வங்கி கணக்கில் இருந்து 95,933 ரூபாய் இணைய வழியாக பரிமாற்றப்பட்டுள்ளது.
இதனை அறிந்த பிரவினின் மனைவி சந்தூரி ரெஜிலா லெட் மீண்டும் வங்கி கிளையை அணுகி புகார் அளித்துள்ளார். ஆனால் வங்கி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காவல் நிலையத்தில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுபோனது தொடர்பாக புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார், உடனே சைபர் க்ரைம் போலீசாருடன் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சீனாவில் இருந்து மர்ம நபர் ஒருவர் வங்கி கணக்கை ஹேக் செய்து திருடியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.