'குமரி மாவட்ட மக்களுக்கு தித்திப்பான செய்தியை சொன்ன முதல்வர்'... 'வதந்தியை நம்பாதீங்க'... முதல்வர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குமரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழக தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது குமரி மாவட்டத்திலிருந்து கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது என முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய முதல்வர், ''கன்னியாகுமரியில் சரக்குப்பெட்டக துறைமுகம் வருவதாக அவதூறு செய்தியைத் தேர்தல் காரணமாகப் பரப்புகிறார்கள். இதை மீனவர்கள் நம்ப வேண்டாம். குமரி மாவட்டத்தில் சரக்குப்பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. தொடக்கத்திலேயே மீனவர்கள் எதிர்த்ததால் இதற்கான சிறப்பு அதிகாரியையும் தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.
நாகர்கோவில் நகர மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது அதிமுக அரசுதான். எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் முக்கியம் அல்ல, மக்கள்தான் முக்கியம். நல்ல சாலை, குடிநீர் வசதிகளைக் கொண்டு வருகிறோம். தேர்தலில் கூறிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை இடையே ₹20 கோடியில் பாலம் அமைத்து பொதுமக்கள் வசதிக்குத் திட்டம் நிறைவேற்றப்படும்.
படகு நிறுத்த கூடுதல் தளம் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் 41 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. குளங்களைத் தூர்வாரி தண்ணீர் சேமித்து வைத்துள்ளோம்'', என முதல்வர் தனது பரப்புரையில் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்