மக்கள் கோரிக்கை - சுற்றுச் சூழல் தினம்: கனிமொழியின் இரட்டை செயல் திட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினம். அதை அர்த்தப்படுத்தும் நடவடிக்கைகளை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஜூன் 4 ஆம் தேதியே தொடங்கிவிட்டார்

மக்கள் கோரிக்கை - சுற்றுச் சூழல் தினம்: கனிமொழியின் இரட்டை செயல் திட்டம்!

திருமதி கனிமொழி அவர்கள், தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் கஸ்பா கிராமத்துக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டில் ஒரு கிராம சபைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார். அப்போது மக்கள் திரண்டு அவரிடம் ஒரு முக்கியமான கோரிக்கை வைத்தனர்.

அதாவது, அங்கு உள்ள ஒரு குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்துள்ளது என்றும், அந்த குளமானது கடலுக்கு மிக அருகில் வெறும் 7 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளதால், நிலத்தடி நீர் உப்பாகும் அபாயம் உள்ளதாகவும் கூறி, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், 16 கிராமங்கள் குடிநீர் பெறுவதோடு, 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கிராம சபைக் கூட்டத்தில் கஸ்பா கிராமத்து மக்களின் கோரிக்கையை நியாபகம் வைத்திருந்து, தற்போது திமுக ஆட்சிக்கு வந்த உடன் அதை நிறைவேற்றும் வகையில் அதற்கான நடவடிக்கைகளை கனிமொழி எம்.பி. மேற்கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கையை ஏற்ற கனிமொழி எம்.பி. பொதுப்பணித்துறை வசம் இருக்கும் அந்த குளத்தின் விவரங்களைக் கேட்டறிந்தார். அடுத்த சில மாதங்களில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒருபக்கம் மக்களுக்கான கொரோனா நிவாரணப் பணிகள் என்றால், இன்னொரு பக்கம் இந்த குளத்தை தூர்வாருவதற்கான சுத்தப்படுத்துவதற்கான செயல் திட்டங்களையும் தயாரித்துக்கொண்டிருந்தார் கனிமொழி எம்.பி.

இதற்கிடையே ’என்வயர்மென்டலிஸ்ட்  ஃபவுண்டேஷன் ஆஃப் இண்டியா’ என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குளத்தை சீரமைக்கவும், ஆழப்படுத்தவும் தங்களுடைய அமைப்பு தயார் என்றும் அதற்கான வழிகாட்டுதல்களைத் தர வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தனர். இந்த சுற்றுச் சூழல்  தன்னார்வத் தொண்டு அமைப்பு ஏற்கனவே சென்னை முதல் திருநெல்வேலி வரை  பல நீர் நிலைகளை செம்மைப்படுத்தியுள்ளது. இந்தியா முழுதும் 15 மாநிலங்களில் 141 ஏரிகளை ஆழப்படுத்தியும் சீரமைத்தும் கொடுத்துள்ளது இந்த அமைப்பு.

கிராம சபையில் மக்கள் தன்னிடம் அளித்த கோரிக்கையை ஏற்று, கனிமொழி எம்பியும்  என்வர்மன்டெலிஸ்ட் ஃபவுண்டேஷன் அமைப்பு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு  இணைந்து ஆத்தூர் கஸ்பா குளத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளை இன்று (ஜூன் 4) துவக்கி வைத்திருக்கிறார்கள்.

kanimozhi karunanidhi world environment day lake

ஜூன் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்துக்கான இந்த தினத்தின் இலக்கு, 'சுற்றுச் சூழல் அமைப்புகளை சீரமைத்தல்' என்பதே. அதாவது நீர் நிலைகளை தூர்வாருதல், காடுகளை மீளமைத்தல் உள்ளிட்டவை ஆகும்.

"இயற்கை நமக்கு அளித்த சுற்றுச் சூழல் அமைப்புகளை  (நீர் நிலை, காடுகள், மலைகள்) மதிக்கவும், பாதுகாக்கவும் உலக சுற்றுச் சூழல் நாளில் உறுதியெடுத்துக் கொள்வது வழக்கம். நாளை (ஜூன் 5) சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படும் நேரத்தில் இந்த வருடத்துக்கான அதன் மைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நீர் நிலைகளை சீரமைக்கும் பணியில் ஒரு நாள் முன்பே  இறங்கியிருக்கிறார் கனிமொழி எம்பி" என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்  கனிமொழியை வாழ்த்துகிறார்கள்.

இந்நிகழ்வில், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

மற்ற செய்திகள்