பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில், ட்விட்டர் பக்கத்தில் கமல் தனது கருத்துக்களை ஆவேசமாக பதிந்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரின் ட்விட்டர் பக்கத்தில், ‘உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரண செய்தியை பெற்றவர்களிடம் சொல்வதுதான். சுபஸ்ரீ மரணச் செய்தி அப்படிப்பட்டதுதான். தன்னுடைய பிள்ளையின், ரத்தம் சாலைகளில் சிந்திக் கிடப்பதை பார்க்கும்போது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருடைய மனதிலும் திகில் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். பெண்ணை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
இதுபோன்ற பல ரகுக்களும், சுபஸ்ரீகளும் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டுள்ளனர். ஏங்க கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா?... எங்கே பேனர் வைக்க வேண்டும், வைக்கக்கூடாது என்பது கூடவா உங்களுக்கு தெரியாது. இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ? எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பது... தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்று மிரட்டுவதும்தான், இவர்களுக்கு தெரிந்த அரசியல்.
இந்த மாதிரி ஆட்கள் மீது எனக்கு மயிரிழை அளவு கூட பயமும், மரியாதையும் கிடையாது. ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக, அந்த தவறுகளை தட்டிக் கேட்டு, தீர்வும் தேடித் தர முற்படும். தலைவர்களை நாங்கள் தான் தேர்வு செய்வோம், ஆனால் நாங்கள் காலம் முழுக்க அடிமையாகத்தான் இருப்போம் என்று சொன்னால் அதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் கிடையாது’ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக
மாற வேண்டும். pic.twitter.com/RQgaiORiHc
— Kamal Haasan (@ikamalhaasan) September 20, 2019