‘நான்காவது தூணை முடக்க வேண்டாம்’... ‘கோவை விவகாரத்தில்’... ‘கமல்ஹாசன் ட்விட்டரில் வலியுறுத்தல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் ஆன்லைன் செய்தி நிறுவனம் விவகாரத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் செயல்பட்டு வரும் ஆன்லைன் செய்தித் தளம் ஒன்று, ‘அரசாங்க மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உணவுக்காக போராடி வருவதாகவும், ரேஷன் கடை ஊழியர்கள் ஏழைகளுக்கான கோவிட் நிவாரண நிதியைத் தவறாக பயன்படுத்துவதாகவும்’ செய்தி வெளியிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைள் குறித்து, அரசுக்கு எதிராக போராட தூண்டும் வகையில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் ஆர்.எஸ். புரம் போலீசார், ஆன்லைன் செய்தித்தள நிறுவனர் மீது, ஐபிசி 188, 505 (i) பிரிவுகள் மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில், ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்க வேண்டாம்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுவீச்சாக இறங்கி செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் ஊக்கமும், உதவியும் அளித்து, பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் தக்க நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன்படி சில நகரங்களில் 3 நாள் முழு ஊரடங்கு உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) April 24, 2020