ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை .. கலந்துகொள்வதாக அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்போது நடைபெற்றுவரும் பாரத ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை .. கலந்துகொள்வதாக அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்..!

காங்கிரஸ் கட்சியின் எம்பியும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை மேற்கொண்டுவருகிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில் யாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி கடந்த 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார். அதன்பிறகு கர்நாடகம், ஆந்திர பிரதேசம் வழியாக பயணம் மேற்கொண்ட அவர் பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

Kamal haasan Participating in JODO Yatra in Delhi

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ள ராகுல் காந்தி, செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார். நேற்று இந்த யாத்திரை 100 வது நாளை நிறைவு செய்தது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். அதில்,"கடந்த இரண்டு மாத காலமாக பாரத ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது. சமத்துவத்திற்காகவும், மக்களை ஒருங்கிணைக்கவும் இந்த யாத்திரையை தொடர்ந்து வருகிறோம். மக்கள் எங்களுக்காக தங்களது இதயத்தையும் வீட்டின் கதவுகளையும் அகல திறந்து வைத்திருக்கிறார்கள். மக்களின் மனதின் குரலை கேட்க வெம்மையிலும், இருளிலும், மழையிலும் நாங்கள் நடக்கிறோம். தங்களது குரலை யாராவது கேட்பார்களா? என நினைக்கும் மக்களின் கருத்தை கேட்க நாங்கள் நடக்கிறோம். வெறுப்பையும் பயத்தையும் எதிர்த்துப் போராட நாங்கள் நடக்கிறோம்.

Kamal haasan Participating in JODO Yatra in Delhi

"இந்த உரையாடலின் மதிப்புமிக்க பகுதியாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். உங்களது செயலும் இதன்படியே அமைந்திருந்திருக்கிறது. உங்களுடைய கருத்துக்களை கேட்கவும், நம்முடைய பார்வைகளை பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறேன். நாம் உடன்படுகிறோமா இல்லையா என்பது முக்கியமல்ல. நாம் சுதந்திரமாக பேசுவதும் கேட்பதுமே முக்கியம். நீங்கள் எங்களுடன் வந்து நடக்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் விரும்புகிறோம். சில காரணங்களால் உங்களால் எங்களுடன் சேர முடியாவிட்டால், இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் எங்களுடன் சேருங்கள். பாரத யாத்ரியாகி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Kamal haasan Participating in JODO Yatra in Delhi

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாககுழு, செயற்குழு & மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது வரும் 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பாரத ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருப்பதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பாரத ஜோடோ யாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருப்பது உறுதியாகியுள்ளது.

 

BHARAT JODO YATRA, KAMAL HAASAN, RAHUL GANDHI

மற்ற செய்திகள்