ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவன் .. கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமை அனுமதித்தால் தன்னுடைய இளைய மகனை நிறுத்த இருப்பதாக EVKS இளங்கோவன் தெரிவித்திருந்தார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் EVKS இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவித்தது.
இதனையடுத்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் EVKS இளங்கோவன். அந்த வகையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்த இளங்கோவன் இடைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் இதுகுறித்து செயற்குழு நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய கமல்ஹாசன், "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஏகமனதாக முடிவு எடுத்துள்ளோம்" என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய கமல்,"பெரியாரின் பேரனும் எனது நண்பருமான EVKS இளங்கோவனுக்கு வேண்டிய உதவிகளை செய்வோம். அவருடைய குடும்பத்தில் நிகழ்ந்த துயரத்தையும் தாண்டி மக்கள் சேவையில் அவர் இறங்கியுள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் முழு ஆதரவையும் வழங்கும்" என்றார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான மக்கள் நீதி மய்ய பொறுப்பாளராக அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கமல் ஹாசன் அறிவித்திருக்கிறார்.
Also Read | 8 வயசுலயே ஜனாதிபதியிடம் விருது.. இந்தியாவின் இளம் ஜீனியஸ்.. யாருப்பா இந்த ரிஷி ஷிவ் பிரசன்னா.?
மற்ற செய்திகள்