கலவரமான கள்ளக்குறிச்சி.. "குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்".. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கலவரமான கள்ளக்குறிச்சி.. "குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்".. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.. முழுவிபரம்..!

துயரம்

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி இன்று காலை பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் பள்ளி வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் மறித்ததால் கள்ளக்குறிச்சியே பரபரப்பாகியது. இதனையடுத்து 400 போலீஸ் அதிகாரிகள் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை வேண்டாம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு,"மாணவி மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அமைதிகாக்க வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வீடியோ பதிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்திருக்கிறார்.

Kallakurichi student dies MK Stalin says culprits will punished

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்

இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,"கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த சூழலில், பள்ளியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குறித்ததால் கள்ளக்குறிச்சியே பரபரப்புடன் காணப்படுகிறது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

KALLAKURICHI, PROTEST, STALIN, கள்ளக்குறிச்சி, கலவரம், ஸ்டாலின்

மற்ற செய்திகள்