Nadhi mobile
Maha Others

கள்ளக்குறிச்சி: நல்லடக்கம் செய்யப்பட்டது மாணவியின் உடல்... கண்ணீரில் மூழ்கிய பெரியநெசலூர் கிராமம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 12 ஆம் தேதி உயிரிழந்த மாணவியின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: நல்லடக்கம் செய்யப்பட்டது மாணவியின் உடல்... கண்ணீரில் மூழ்கிய பெரியநெசலூர் கிராமம்..!

சோகம்

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி ஜூலை 13 ஆம் தேதி மரணமடைந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் இதேபோல மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி போராட்டத்தில் குதித்தனர் மக்கள். இதில், பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் கள்ளக்குறிச்சியில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நீதிமன்ற விசாரணை

இந்நிலையில், மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும், தங்களது தரப்பு மருத்துவரை உடற்கூராய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் மாணவியின் தந்தை. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் மாணவி தரப்பு மருத்துவரை நியமிக்க மறுத்துவிட்டனர் நீதிபதிகள். உச்ச நீதிமன்றமும் இதே உத்தரவை பிறப்பித்தது.

இதனிடையே மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்காத நிலையில், மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளும்படி பெற்றோரின் வீட்டில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

கண்ணீருடன் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர்

இதனிடையே நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இன்று காலை கதறி அழுதபடி தங்களது மகளுடைய உடலை பெற்றோர் வாங்கிக்கொண்டனர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் கொண்டுசெல்லப்பட்டது மாணவியின் உடல். இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மற்றும் ஏராளமான உள்ளூர் மக்கள் கலந்துகொண்டனர்.

கடைசியாக மாணவியின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே மாணவியின் தந்தை கண்ணீர் மல்க , உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் மாணவியின் ஆத்மா சாந்தியடையும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

KALLAKURICHI, STUDENT, FUNERAL, கள்ளக்குறிச்சி, மாணவி, நல்லடக்கம்

மற்ற செய்திகள்