கள்ளக்குறிச்சி மாணவி மறைவு.. யாருமில்லாத வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்.. இரவு நேரத்தில் நடந்த பரபரப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த சம்பவம், தமிழகம் எங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பெண்ணின் உடலை வாங்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
அதே போல, மாணவியின் தாயாரும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சார்பில், செயலாளரும் சில விளக்கங்களை அளித்திருந்தார்.
இதற்கு மத்தியில், போராட்டமாக ஆரம்பித்தது, பின்னர் வன்முறையாக வெடித்தது. தனியார் பள்ளியின் பேருந்துகள் அனைத்தும் தீ வைக்கப்பட, பள்ளி கட்டிடங்கள், அங்கிருந்த சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். அடுத்தடுத்து நாட்களில், கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான விவகாரம் பரபரப்பை கிளப்பி வந்தது.
சமீபத்தில், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சிலரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், வன்முறையில் ஈடுபட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவியின் உடல், தகுதியற்ற மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என அவரின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
அதே போல, தங்களின் தரப்பு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் இடம்பெற வேண்டும் என மானைவியின் தந்தை குறிப்பிட்டிருந்த நிலையில், இதனை மறுத்த நீதிமன்றம், பெற்றோர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனையில் நடக்கலாம் என்றும், அவர்கள் வரவில்லை என்றாலும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், மாணவியின் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் அமைந்துள்ள வீட்டில், துணை வட்டாட்சியினர் தலைமையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டிச் சென்றிருந்தனர். மேலும், மாணவியின் பெற்றோர்கள் உடற்கூராய்வின் போது வந்தால், அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, நேற்று மாணவியின் உடல், 3 மருத்துவர்கள் மற்றும் தடயவியல் அதிகாரிகளுடன் மறுகூராய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாணவியின் தந்தை நேரில் வரவில்லை என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. உடற்கூறாய்வு முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கிடங்கில் மாணவியின் உடல் வைக்கபட்டுள்ள நிலையில், மாணவியின் உடலை வாங்கிச் செல்ல பெற்றோர்கள் வராத காரணத்தினால், உடலை வந்து வாங்கிச் செல்லுங்கள் என குறிப்பிட்டு, மீண்டும் நோட்டீஸ் ஒன்றை அதிகாரிகள் ஒட்டிச் சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால், அருகே இருந்த உறவினர்கள் வீட்டில், அதிகாரிகள் தகவலை தெரிவித்து சென்றதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருக்கும் மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்கிச் செல்வார்களா அல்லது மீண்டும் நீதிமன்றத்தை நாடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Also Read | "வரும்போது சில்றை கொண்டு வாங்க..".. "ஓகே மேடம்".. ஆர்டர் பண்ண Cake-அ பார்த்து அதிர்ந்த இளம்பெண் 😀
மற்ற செய்திகள்