'தமிழகத்தை உலுக்கிய கொடூரம்'... 'சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டு கொலை' ...வெளியான சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்ல பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

'தமிழகத்தை உலுக்கிய கொடூரம்'... 'சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டு கொலை' ...வெளியான சிசிடிவி காட்சிகள்!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக ரேஷன் அரிசி மற்றும் மணல் கடத்தப்படுவதால் இங்குள்ள சோதனை சாவடியில் எப்போதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பது வழக்கம். அந்த வகையில் நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வில்சன் எனும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக வந்த இரண்டு பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை நோக்கி நான்கு முறை சுட்டுவிட்டு தப்பியோடினர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் நடந்த சம்பவம் குறித்துகாவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டு விட்டு மர்ம நபர்கள் ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த வில்சனை கடத்தல் கும்பல் சுட்டு கொன்றார்களா? இல்லை, வில்சனால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பழிவாங்கும் செயலில் இவ்வாறு ஈடுபட்டனரா? ஹவாலா கும்பலுக்கு தொடர்புடையவர்களா? எனும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CCTV, MURDER, KERALA, TAMILNADUPOLICE, GUN, GANG, KALIYAKKAVILAI, KANNIYAKUMARI DISTRICT, SPECIAL SUB INSPECTOR, COP