'இங்க ஜீன்ஸ், டி-சர்ட் போட கூடாது'... 'தலை முடியை விரித்து விட கூடாது'... சென்னை கல்லூரியில் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று சீட் கிடைத்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி வகுப்புகள் தொடங்குவது வழக்கம். அதன் அடிப்படையில், முதல்கட்ட கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சி சென்னை மருத்துவ கல்லூரியில் நேற்று நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்பு மருத்துவ கல்லூரி விதிகள், உடை கட்டுப்பாடு குறித்து கல்லூரி டீன் மாணவர்களுக்கு விளக்கினார்.
அப்போது பேசிய அவர் ''மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது. பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணிந்து கொண்டு கல்லூரிக்கு வரலாம். மாணவிகளை பொறுத்தவரை சேலை, சுடிதார் அணியலாம். மாணவர்கள் மேற்கிந்திய ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதே போன்று மாணவிகள் தலை முடியை விரித்து போடக்கூடாது'' என டீன் வசந்தாமணி குறிப்பிட்டார்.
இதனிடையே மாணவர்களிடம் பேசிய, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி '' புதிய பாடத்திட்டத்தின் படி, முதலாம் ஆண்டிலேயே மாணவர்கள் நோயாளிகளை அணுகுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என பேசினார். இதனிடையே ராகிங் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ராகிங்யில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.