'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா'... ‘3-ம் ஆண்டு நினைவு தினம்'... ‘ஒரு சிறு பார்வை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா'... ‘3-ம் ஆண்டு நினைவு தினம்'... ‘ஒரு சிறு பார்வை’!

இரும்பு பெண்மணி, தைரியசாலி, புரட்சித் தலைவி, அம்மா என்று பலவிதமாக கட்சி பாகுபாடின்றி  அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா. கடந்த 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள், ஜெயராம் - வேதவல்லி தம்பதியருக்கு மகளாக மைசூரில் உள்ள மேல்கோட்டையில் பிறந்தார். திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, கோலோச்சிய ஜெயலலிதா, மொத்தம் 127 படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின்னர், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) கட்சியில் சேர்ந்து, 1982-ம் ஆண்டில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அரசியல்வாதியாக மாறிய ஜெயலலிதா, கடலூரில் தனது முதல் பொதுக்கூட்டத்தில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் வெற்றிகரமான உரையை நிகழ்த்தினார். அதன்பிறகு, கடந்த 1983-ம் ஆண்டில், அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எம்ஜிஆரால், ஜெயலலிதா நியமிக்கப்பட்டு, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.

1984-ம் ஆண்டில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக செல்வி ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், தமிழகத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, 2 ஆண்டுகள் கழித்து, 1989-ம் ஆண்டில் அதிமுக-வின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். அதன்பின்னர், அந்த ஆண்டே சட்டப் பேரவை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

அத்துடன், தமிழக சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். இதையடுத்து, அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 1991-ம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அதன்பின்னர், சொத்து குவிப்பு வழக்குகளால் சறுக்கல்களை சந்தித்தாலும், மனம் தளராது போராடி வெற்றி பெற்று வந்தார். இதனால் கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய சட்டப்பேரலைத் தேர்தல்களில் வெற்றிபெற்று மீண்டும் அரியணை ஏறினார்.

அத்துடன் 6-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, நீர்ச்சத்து குறைபாட்டால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு, 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பயனின்றி, கார்டியாக் அரெஸ்ட்டால்,  டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவரது இழப்பு அதிமுக-வினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அவரின், 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

JJAYALALITHAA, ANNIVERSARY, DEATH, AIADMK