"நாட்டுக்கு பெருமை சேர்க்குறவங்க இவங்கதான்".. கபாடி வீரர்களுக்கு புதிய திட்டம்.. விளையாட்டுத்துறை அமைச்சர் அளித்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கபாடி வீரர்களுக்கு காப்பீட்டு அளிக்க திட்டம் இருப்பதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சோகம்
தமிழகத்தில் கபாடி போட்டிகள் எப்போதும் பெரும்பாலான மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஊரிலும் அவ்வப்போது கபாடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விமல்ராஜ் என்னும் கல்லூரி மாணவர் களத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் முன்னரே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் புறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த விமல்ராஜ், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். கபாடியில் மிகுந்த ஆர்வத்துடன் திகழ்ந்த விமல்ராஜின் எதிர்பாராத மறைவு உள்ளூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
நிதி உதவி
இதனையடுத்து கபாடி வீரரான விமல்ராஜ் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தமிழக அரசு அறிவித்திருந்த 3 லட்ச ரூபாயை அமைச்சர்கள் கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்தினருக்கு வழங்கினர். மேலும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியான 2 லட்சத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.
காப்பீட்டு திட்டம்
அப்போது பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்," கபாடி வீரர் விமல்ராஜின் மறைவு ஈடு செய்ய முடியாதது. வறுமையில் தவித்த அவர் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கபடியில் சிறந்து விளங்கியுள்ளார். இவர்களை போன்றவர்கள் தான் பலன் எதிர்பாராமல் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்கள். அவருடைய மறைவு பலரையும் வேதனை அடைய செய்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கபாடி வீரர்களுக்கு காப்பீடு திட்டத்தை கொண்டுவர திட்டம் உள்ளது" என்றார்.
மற்ற செய்திகள்