Innocent Divya IAS: நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு புதிய பொறுப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட கலெக்டராக கடந்த 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து இருந்தார்.
இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுபேற்ற பிறகு சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தார். இதேபோல் யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவோடு இணைந்து ஆக்கிரமிப்பு செய்த ரிசார்ட்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், ''உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது'' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதன்பின்னர், யானை வழித்தடங்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அண்மையில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் ''நிர்வாகரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது'' என கூறியிருந்தது. தமிழக அரசின் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, நீலகிரியின் பொறுப்பு ஆட்சியராக கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார். ஆனால் ''இன்னசென்ட் திவ்யாவுக்கான புதிய பணி என்ன?'' என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் வியாழக்கிழமை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஏஸ் வெளியிட்ட அறிவிப்பில் ,“ வருவாய் நிர்வாகத்துறையின் ஆணையரும், பேரிடர் மேலாண்மைத்துறையின் இயக்குனருமான சுப்பையா ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு பால்வளத்துறையின் இயக்குனராகவும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பொறுப்பை வகித்து வந்த கந்தசாமி ஐ.ஏ.எஸ். பதவியிடம் மாற்றப்பட்டு பேரிடர் மேலாண்மைத்துறையின் இயக்குனராகவும் மற்றும் வருவாய் நிர்வாகத்துறையின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஏ.ராமன் ஐ.ஏ.எஸ். கூடுதலாக பொறுப்பு வகித்துவந்த தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் பொறுப்பிற்கு, நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்படுகிறார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்