'எங்க இதயமே நின்னு போச்சு'...'கண்ணீர் வடித்த இங்கிலாந்து'... இந்திய மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இங்கிலாந்தில் இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் ரத்தோட் . திருமணமான இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணரான இவர், இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கர்டிப் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜிதேந்திர குமார், திடீரென உயிரிழந்தார். இந்தியாவில் மருத்துவம் படித்த ஜிதேந்திர குமார், 1995-ம் ஆண்டுவாக்கில், இங்கிலாந்தில் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியை தொடங்கினார். அதன்பின்பு சில ஆண்டுகள் வேறு நாட்டில் பணியாற்றி விட்டு, 2006-ம் ஆண்டு மீண்டும் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு திரும்பினார்.
இதனிடையே மருத்துவர் ஜிதேந்திர குமாரின் மரணம், வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையை நிலைகுலைய செய்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாங்கள் மிகவும் உன்னதமான மருத்துவரை இழந்து விட்டோம். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். நோயாளிகள் மீது கரிசனம் உள்ளவர். அதனால் எல்லோராலும் விரும்பப்பட்டார். அவருடைய மரணம் எங்களது இதயத்தில் தீராத வலியை கொடுத்துவிட்டது'' என உருக்கத்துடன் கூறியுள்ளார்கள்.