‘அடுத்த வாய்ப்பு வரும்போது இத கண்டிப்பா செய்யணும்’.. அதுக்கு உங்ககிட்ட எதாவது ஐடியா இருக்கா? அஸ்வினின் வைரல் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழகம் எங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் தெருத்தெருவாக அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் நீர் ஆதாரங்களான புழல், வீராணம் போன்ற ஏரிகளின் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் லாரிகளை நம்பி இருக்கும் குடும்பங்களின் நிலையோ பரிதாபமாகியுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் பொதுமக்களிடம் சில வேண்டுகோள்களையும் விடுத்தது. அதில், ஷவரில் குளிப்பதற்கு பதிலாக வாலியில் தண்ணீரை பிடித்து குளித்தால் 30 முதல் 40 லிட்டர் வரை தண்ணீர் சேமிக்கப்படும். சிலர் சென்னை குடிநீர் வாரியத்தின் நீரைப் பயன்படுத்தி காரை கழுவுகின்றனர். இதனால் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் மக்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அதற்கு பதிலாக ஈரத்துணியினால் காரைத் துடைக்கலாம் என்பன போன்ற பல்வேறு வேண்டுகோள்களை சென்னை குடிநீர் வாரியம் மக்கள் முன்வைத்தது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் தண்ணீர் தேவை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கோடையின் தாக்கத்தினால் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அடுத்த வாய்ப்பு வரும்போது தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும். நாம் அடுத்த தலைமுறையினர் வாழ்வதற்கு எவற்றையாவது விட்டு செல்ல வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க மக்கள் கூறிய கருத்துக்களுக்கு டுவிட்டரில் பதிலளித்தும் பேசியுள்ளார்.
Looks like a summer where TN is in for some serious water shortage. I sincerely pray that the resources are stored with utmost care when the next opportunity presents itself. We need to leave "something" behind for the next generation. #TNdrought any conservation ideas anyone??? pic.twitter.com/z6QVhCpuQz
— Ashwin Ravichandran (@ashwinravi99) May 27, 2019